அன்புள்ள பாரதிக்கு..

அன்புள்ள பாரதிக்கு,

நலம் நலமறிய ஆவல்.
அங்கும் உன்னை தொந்தரவு செய்வதற்கு
மன்னிக்கவும் வேறு வழியில்லை.
சாதி,மதம்,பெண்கள் முன்னேற்றமென,
புவியை புரட்சி எழ செய்வதில் நீதான் expert.
உன் கவிதைதான் மேற்கோள் காட்டப்படுகிறது.
அதனால் நீதி வேண்டி
உனக்கு மடல் எழுதுகிறேன்.

பள்ளி வகுப்பில் இருபது பேர் உலகம்.
சிரிப்பும் கூத்தும் குதூகலம்.
பன்னிரண்டு வயதில் விளங்கியது,
நானும் என் நண்பனும் இருக்கை பகிர்ந்த போது பல கண்கள் எங்கள் மேல் பதிந்த கணம்,
பால் வேற்றுமையை
படிப்பறையில் கடக்க முயன்றேன்.

ரம்ஜானுக்கு நான்கு வீட்டு பிரியாணி
என் வீட்டுக்கு வருவதும்,
தீபாவளி பலகாரம்
அவர்கள் வீட்டுக்கு செல்வதும் கண்டு,
சாதி மதத்தின் மகத்துவம் அறிந்தேன்.

நான் உயர் கல்விக்கும்,
என் தோழி,கணவன் வீட்டுக்கும் செல்லும்போது
நீ ஏன் பெண்ணியம் பேசினாய் என புரிந்தேன்.

கல்லூரி பதிவிற்காக சாதிச் சான்றிதழ்
வழங்கியபோது அதுவே
சாதி குறிப்பிடுவது கடைசி.
என்று உறுதி கொண்டேன்.

என் மகன் பிறந்த 18ஆம் நாள்
அவன் தாத்தா மரித்து போக,
அவன் தன் தாத்தாவின் அவதாரம் என்று
என்மாமியார் அறிவித்த போது
என் மகனின் பிறந்த நேரத்தை
காரணம் காட்டிய மூடநம்பிக்கைகளின்
வாய்கள் மூடியதை உணர்ந்தேன்.

இப்படி என் மூன்று தலைமுறை
சந்தித்த சமூக பிரச்சைனைகள்
களை எடுக்கபட்டது என ஆசுவாசப்பட்டேன்…

இந்த அமைதி வானவில்லின் காலம் போலத்தானா?

உன் வரிகள் வழக்காகாமல் வரலாறாய் மட்டும் ஆனதேன்?

ஜாதிகள் இல்லையடி பாப்பா என்றாய்

இன்று பாப்பாவின் பெயர்கள் ஜாதி பெயர்களில் முடிவது நாகரீகம் என்று ஆனது.

புறஞ்சொல்லல் ஆகாது பாப்பா என்றாய்

புறம் வேண்டாமென
புலனத்தில் பேசலாமென ஆனது.

புதுமை பெண்ணிற்கான உன் கனவு கவிதை,

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்

பெண்ணியத்தின் brand caption ஆனதோடு பெண்கள் சிந்தும் நீலிக் கண்ணீரும்,
கணவன்-மனைவி சண்டையும்,
பெண்ணியத்தின் கணக்கில் சேர்க்கப்படுகிறது.

Twitterஇல் பகிரும் எழுத்து கட்டுபாடுக்கும் தலைப்பால் views அல்லும் முயற்சிக்கும்,
மத்தியில் உன் கவிதையை
முழுதாய் படிக்கவோ ஆராயவோ
யாருக்கும் நேரமில்லை அதனால் தான்

நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்

என்ற சொற்கள்,எங்கள் செல்விகளின்
செவிகளுக்கு எட்டவில்லை.

சாதிக் கொடுமைகள் வேண்டாம்; – அன்பு
தன்னில் செழித்திடும் வையம்;

என்று முரசு கொட்டினாய்,
இன்று சாதி பிரிவுகள் சொல்லி
Facebook group வைத்து networking
செய்கிறார்கள்.

பாருக்குள்ளே தெய்வம் ஒன்று; –இதில்
பற்பல சண்டைகள் வேண்டாம்.

என்று எடுத்துறைத்தாய்

ஆனால் அந்த ஒற்றை தெய்வம்
ஆண்பாலா பெண்பாலா?
என்ன ஆடை அணிந்திருக்கும்
என்று கேட்கும் வன்மம் மிகுந்த
புத்திசாலி கூட்டங்கள் இங்கு உண்டு.

இப்போது முளைத்திருக்கும்
சமூக வலைச்சிக்கலுக்கு
என்ன போராட்டத்தை கையில் எடுப்பது?

பெண்மைக்கும்,பெண்ணியத்திற்கும்
பகுத்தறிவுக்கும்,வன்மத்திற்கும்
நம்பிக்கைக்கும்,மூடத்தனத்துக்கும்
சுதந்திரத்திற்கும்,செறுக்கிற்கும்
வேறுபாடு மறைந்ததற்க்கு காரணம் என்ன?

மனிதன் வளர்ச்சிப்படி ஏரும் போது
மனிதத்தை மறந்தது தான் காரணமா?
தொழில் வேற்றுமையில் உருவான சாதி
தொழில் முன்னேற்றதிற்காக
உபயோகம் செய்தால் என்ன என்ற வாதமா? பெண்ணியத்திற்கு பின்னால்
பெண்கள் ஒழியலாம் என்ற முடிவா?
மூடநம்பிக்கைகளை
நம்பிக்கைகளாக மாற்ற முயற்சியா?

பாரதி இதை யாரிடம் முறை இடுவது?

நீ வந்து சொன்னால் கேட்பார்களா?
இல்லை Alexa,google
compatibility இல்லாததால்
உன் voiceம் கேட்காமல்போகுமா?

மெல்ல தமிழ் இனி சாகும் -அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்!
என்றந்தப் பேதை உரைத்தான்!ஆ !
இந்த வசையெனக் கெய்திட லாமோ

என்ற அஞ்சி நீ சீக்கிரம் சென்றுவிட்டாய்.

எங்களின் இன்றைய மனிதம் பாட மறுமுறை வா!!

நீ வரும் வரை
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பது இல்லையே
என்று அவர்களை போல்
வாக்கு சுதந்திரம் கையாண்டு,
தனி மனித மாற்றம் என்னுள் நிகழ்ந்தால் போதும் என்று பயணிக்கிறேன்.

இப்படிக்கு,

பூரணி.